இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
கிரிக்கெட் உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் முதன்மையானவர் இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகாலம் தனது சுழற்பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை கட்டுக்கோப்பில் வைத்திருந்தார்.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் ஒரு வீரராக இருந்த முத்தையா முரளிதரன் அடுத்தடுத்து பல வித்தியாசமான யுக்திகளை கையாண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை குவித்தார்.
டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமை இவர் வசமே உள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இவரின் சிறந்த பந்து வீச்சினால் 2007ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்றது. இவரின் சுழற்பந்து வீச்சு பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் ஐசிசி நடத்திய அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்துவீசி வருவதாக ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார்.
மிகச்சிறிய நாடான இலங்கை, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவர் முத்தையா முரளிதரன். அண்மையில் இவரின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக்கப்பட உள்ளதாக பல செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
படத்தின் பெயர் ‘800’ என வைக்கப்பட உள்ளதாகவும், படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருப்பதாகவும் வட்டாரத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கவிருக்கும் இப்படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் இன்னபிற கிரிக்கெட் சார்ந்த நாடுகளில் நேர்த்தியாக படமாக்கப்பட இருக்கின்றன.