சஞ்சு சாம்சனைத் தகுதிக்கு மீறி புகழ்கிறார்கள்: சாடிய வினோத் காம்ப்ளி நெட்டிசன்கள் இடையே காரசார கொடுக்கல் வாங்கல்

Former cricketers Aakash Chopra (L) and Vinod Kambli (R) were in a war of words on Twitter over Ajinkya Rahane's form | Photo Credit: Twitter

முன்னாள் இந்திய பேட்ஸ்மென் வினோத் காம்ப்ளி சஞ்சு சாம்சனின் பெற்றுள்ள ஆரஞ்சுத் தொப்பியையும் அவரது திறமைகள் குறித்தும் குறைவாக பேசி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

தற்போது 6 போட்டிகளில் 239 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 150 ஆகும். இந்நிலையில் ஆரஞ்சு தொப்பியை அவரால் தக்க வைக்க முடியுமா? ஐபிஎல் தொடரில் ஒரு சதமாவது அவர் எடுக்கட்டும் என்றெல்லாம் சஞ்சு சாம்சனுக்கு வினோத் காம்ப்ளி சவால் விடுமாறு ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்ய கடுமையாக டிவிட்டர்வாசிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

வினோத் காம்ப்ளி கூறியதாவது: சஞ்சு சாம்சன் பற்றி வர்ணனையாளர்கள் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து வருகின்றனர். அவரது ஐபிஎல் சாதனைகள் உள்நாட்டு கிரிக்கெட் சாதனைகள் என்று புகழாரம் கூடிவருகிறது. இவர்களுக்கு பேச வேறு எதுவும் இல்லையா, மகா அறுவையாக உள்ளது, என்று ட்வீட்டியுள்ளார்.

மேலும் நெட்டிசன்கள் விளாசு விளாசென்று விளாசியதையடுத்து விடாமல் வினோத் காம்ப்ளி, “நீங்கள் அவரைக் கிளாஸ் பிளேயர் என்று கூறினால் அவர் 100 அடிப்பதைப் பார்க்க விரும்புகிறேன், அல்லது ஆரஞ்சுத் தொப்பியை தற்காக்க முடியுமா? இவற்றை சாதித்தாரென்றால் நான் அப்போது கூறுகிறேன், சஞ்சுவிடம் தனித்திறமை உள்ளதென்று” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்னொருவர் வினோத் காம்ப்ளியிடம், “உங்கள் பாராட்டுத் தேவையில்லை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது சஞ்சு ஒரு அபாரமான வீரர் என்று உங்களைப் போன்ற ஒரு சாதாரண வீரரிடமிருந்து அவருக்குப் பாராட்டுதல் தேவையில்லை என்று உரிய மரியாதையுடன் உங்களுக்குக் கூறுகிறோம்” என்றார்.

உடனே வினோத் காம்ப்ளி, “உலகம் ஏற்றுக் கொண்ட சிறந்த வீரரா, ஹா… ஹா.. என்று ஸ்மைலிகளை அள்ளித்தெளித்துள்ளார்.

இதற்கு பிரசாத் மால்யா என்பவர் பதிலளிக்கும் போது, “தென்னிந்திய வீரர் மேல் உங்களுக்கு பொறாமை. நீங்களும் இந்த வட இந்திய வக்காலத்து லாபிதான் போலும். தென்னிந்தியாவிலிருந்து நன்றாக ஆடுபவர்களை அணித்தேர்வாளர்கள் கண்டு கொள்வதில்லை. அந்த வீரர் நீலச்சீருடையை அணிவதேயில்லை.

இதற்கு வினோத் காம்ப்ளி: “ரிலாக்ஸ் பிரதர்! கிரிக்கெட்டில் லாபி எதுவும் இல்லை. நிறம், சாதி என்று பேசி மக்களைத் தூண்டி விட வேண்டாம்” என்றார்.

இதற்கு மீண்டும் ட்வீட் செய்த பிரசாத் என்பவர், “நான் தூண்டிவிடவில்லை. நீங்கள்தான் சார் தூண்டி விடுகிறீர்கள். கிரிக்கெட்டில் லாபி இல்லையா… உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு இவ்வாறு கூற முடியுமா?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

இதற்கும் விடாமல் பதில் அனுப்பிய காம்ப்ளி: உங்கள் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத்தை கேளுங்கள், என்று கூறியுள்ளார்.

கிஷோர் சத்யா என்ற இன்னொரு ட்விட்டர்வாசி, “மிஸ்டர் காம்ப்ளி, சஞ்சு சாம்சன் தற்போது ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக் காரர் அதனால் பேசுகின்றனர். உங்கள் கூட்டாளி சச்சின் போல் உங்கள் மட்டைப் பேசியிருந்தால் இப்போது புதிய திறமைகள் குறித்து பொறாமைப் பட வேண்டிய அவசியமிருக்காது” என்று பதிலடி கொடுத்தார்.

இதற்கும் வினோத் காம்ப்ளி விடாமல்., “அவர் இதே போன்று தொடர்ந்து ஆட முடியுமா? நான் உண்மையைத்தான் கூறுகிறேன்”

இன்னொரு ட்விட்டர் வாசி வினோத் காம்ப்ளி உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வருகிறார் அவர் இந்திய அணியில் இடம்பெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூற இதற்கும் வினோத் காம்ப்ளி மறுத்து, “சீராக அவர் ஆடவில்லையே?” என்று பதிவிட்டுள்ளார். மேலும் வர்ணனையாளர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் தற்போது ஆடிவரும் வீரர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சாடியுள்ளார் காம்ப்ளி.

இன்னொருவர் காட்டமாக “உங்களுக்கு சஞ்சு சாம்சன் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்றால் டிவியை அணைத்து விட்டுச் செல்லுங்கள்” என்று கூற வினோத் காம்ப்ளி, விடாப்பிடியாக, “காட் பிளெஸ் யூ சேட்டா, போய்த் தூங்கு” என்று பதிலளித்துள்ளார்.

இன்னொரு வாசகர் லாலு செபான், “பொறாமைப் பிடித்து ஆட்டுகிறது, அடுத்த பிறவியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்” என்றார்.

இதற்கும் விடாமல் பதிலடி கொடுத்த காம்ப்ளி, “உங்கள் அடுத்த பிறவி என்ன? அடுத்த பிறவி பற்றி யோசிக்காமல் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழியுங்கள்” என்றார்.

காம்ப்ளி இவ்வாறு வளரும் வீரர் ஒருவரை இகழ்ந்து கூறுவது அவர் தனக்கு மலிவான விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் என்று பலரும் சாடி வருகின்றனர்.

Editor:

This website uses cookies.