வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயில் மற்றும் லெவிஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 10 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 115 ரன்கள் எடுத்திருந்த போது, 29 பந்துகளில் 43 ரன் விளாசிய லெவிஸ் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கெயில், விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 41 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த சாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஹோப் 19 (40) ரன்களுடனும், ஹெட்மயர் 18 (23) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் போட்டி தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும் ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். மழை காரணமாக, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 255 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 10 ரன்களிலும் தவான் 36 ரன்களிலும் ஆட்ட மிழந்தனர். விராத் கோலி நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் விராத் கோலியும் அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 212 ஆக இருந்தது போது, 41 பந்தில் 65 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். அடுத்து கேதர் ஜாதவ் வந்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த விராத் கோலி, 94 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 43-வது சதம். அவர் கடந்த போட்டியிலும் சதம் விளாசியிருந்தார்.
இதையடுத்து 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. விராத் 114 ரன்களுடனும் ஜாதவ் 19 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றிய து. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கேப்டன் விராத் கோலிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன.