கிரிக்கெட் அரங்கின் ‘கிறிஸ்டியானோ ரோனால்டோ’ ஆக இந்திய அணி கேப்டன் கோஹ்லி திகழ்கிறார்,’’ என பிரையன் லாரா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணிக்கும் கேப்டனாக உள்ளவர் கோஹ்லி 31. சர்வதேச அரங்கில் அதிவேகமாக 20,000 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர். அதிக சதங்கள் அடித்த வீரர்களில் இந்தியாவின் சச்சின் (100), ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கிற்கு (71) அடுத்த இடத்தில் உள்ளார் கோஹ்லி (70).
இதுகுறித்து விண்டீஸ் ‘ஜாம்பவான்’ பிரையன் லாரா 50, கூறியது:
கோஹ்லியின் பேட்டிங் திறமை நம்பமுடியாத அளவில் உள்ளது. சரியான முறையில் போட்டிக்கு தயாராகிறார் என்பதை விட முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார் கோஹ்லி. இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.
ரோகித் சர்மா அல்லது லோகேஷ் ராகுலை விட இவர் திறமையானவர் என்று நினைக்கவில்லை. ஆனால் கோஹ்லியின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல் தான் மற்றவர்களில் இருந்து இவரை வேறு படுத்துகிறது.
கால்பந்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல கிரிக்கெட் அரங்கில் சிறப்பான வீரராக திகழ்கிறார் கோஹ்லி. இவரது உடற்தகுதி, மனவலிமையை நம்பவே முடியவில்லை. கடந்த 1948 களில் வீழ்த்த முடியாத வீரராக இருந்தார் ஆஸ்திரேலிய ‘ஜாம்பவான்’ டான் பிராட்மேன்.
1970 களில் தோற்கடிக்க முடியாத கேப்டனாக இருந்தார் விண்டீஸ் அணியின் கிளைவ் லாயிட்ஸ். அதுபோல கோஹ்லியின் பேட்டிங் திறன் வியக்க வைக்கிறது.
கிரிக்கெட்டின் எந்த ஒரு காலத்திலும் கோஹ்லியின் பெயரை எழுதாமல், தவிர்த்து விட்டுச் செல்ல முடியாது. டெஸ்ட் (54.97 ரன்), ஒருநாள் (60.02) மற்றும் ‘டுவென்டி–20’ (52.66) என மூன்று வித கிரிக்கெட்டிலும் சராசரியாக 50.00 ரன்னுக்கும் மேல் வைத்துள்ளார். இப்படி ஒரு வீரரை எல்லாம் கேள்விப்படுவதே மிகவும் அரிது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.