டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் விராட் கோஹ்லி
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி டான் பிராட்மேன், சச்சின் போன்ற முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (டிசம்பர் 6-ம் தேதி) தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியானது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் சுருண்டது.
இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 5 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மன், ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோர் இந்த சாதனையைச் செய்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,809 ரன்களும், வி.வி.எஸ். லக்ஷ்மன் 15 டெஸ்ட் போட்டிகளில் 1,236 ரன்களும், டிராவிட் 1,166 ரன்களும் எடுத்திருந்தனர். ஆனால், இந்தச் சாதனையை வெறும் 9 டெஸ்ட் போட்டிகளில் செய்து கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஒரு சாதனையையும் விராட் கோலி செய்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். நடப்பாண்டில் சிறந்த பார்மில் இருக்கும் கோலி 10 டெஸ்டில் விளையாடி 1063 ரன்களைக் கடந்து அதிக ரன்கள் அடித்தவராக வலம் வருகிறார்.
இது தவிர ஆஸ்திரேலிய மண்ணில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலிலும், முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்;
இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:
இப்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. நாளை (4ம் நாள்) ஆஸ்திரேலியா முதல் 2 மணி நேர ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும். இல்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா 0-1 என்று தோல்வியுடன் தான் செல்ல முடியும்.
இவ்வாறு சச்சின் இட்ட ட்வீட்ட்டை ஆயிரக்கணக்கானோர் மறு ட்வீட் செய்ய, 8,000த்துக்கும் மேலான லைக்குகள் அள்ளியுள்ளது.