ரொம்ப நன்றி… கண்ணீருடன் டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி !!

ரொம்ப நன்றி… கண்ணீருடன் டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

சமகால கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான விராட் கோலி, சர்வதேச டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸின் பர்படோஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹென்ரிச் கிளாசன் உள்ளிட்ட சில வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்தாலும், இந்திய வீரர்களின் நம்பிக்கையான போராட்டத்தின் மூலமும், கடைசி 5 ஓவர்களை ஹர்திக் பாண்டியா, பும்ராஹ் உள்ளிட்ட வீரர்கள் மிக கச்சிதமாக வீசியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதி போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய விராட் கோலி, சர்வதேச டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “இது எனக்கு கடைசி உலகக்கோப்பை தொடர். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன், இதனால் இந்திய அணிக்காக இதுவே எனது கடைசி டி.20 போட்டியாகவும் இருக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மிக மிக அவசியமானது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். கடவுளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த தொடர் முழுவதும் நாங்கள் மிக சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். எனக்கு இது 6வது உலகக்கோப்பை தொடர், ரோஹித் சர்மாவிற்கு இது 9வது உலகக்கோப்பை தொடர் என்பதால் ரோஹித் சர்மா இந்த வெற்றிக்கு முழு தகுதியானவர். எனது தற்போதைய மனநிலையை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நான் இந்த தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்ததால் எனக்கு பெரிய நம்பிக்கையும் ஏற்படவில்லை, ஆனால் கடவுளின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.