கிரிக்கெட்டில் மட்டும் இல்லை, இந்த விசயத்திலும் நான் தான் கிங்; மிகப்பெரும் பெருமையை பெற்றுள்ளார் விராட் கோஹ்லி
இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது, 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 31 வயதான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டவராக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனோல்டா விளங்குகிறார். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரோனோல்டா 200 மில்லியன் (20 கோடி) பின் தொடர்பவர்களை (பாலோயர்ஸ்) பெற்றுள்ளார்.
இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் , பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா (49.9 மில்லியன்) உள்ளார். 3 வது இடத்தில் தீபிகா படுகோனே (44.1 மில்லியன்கள்) உள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, இதற்கு முன் செய்யப்பட்ட பல பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துவிடுவார்.