இதனை மட்டும் சரியாக செய்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் : விராட் கோலி கடுப்பு

எவ்விதமான சமரசத்துக்குள்ளும் செல்லாமல், எது பிரச்சினையோ அதைப்பற்றி பேசுவதற்கு யோசிக்காதவர் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றதற்கான காரணம் இதுதான் என்று நேரடியாகவே சொல்லிவிட்டார் கோலி.

171 என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் எனர்ஜி நல்ல லெவலில் இருந்தது. முதல் மூன்று ஓவர்களுக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஆட்டம் நான்காவது ஓவரில் சொதப்பியது. புவனேஷ்வர் குமார் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைத்தவறி கீழே விட்டது இந்திய அணி. இதைத்தான் விராட் கோலி விமர்சித்தார்.

“இந்த மாதிரி ஃபீல்டிங் செய்தால், எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அது அதிக ரன் எனச் சொல்லமுடியாத ஒன்று. கிரிக்கெட் எப்போதும் கயிறு மேல் நடப்பது போலத்தான். சிறு தவறும் எதிர்பார்க்காதவற்றைக் கொடுத்துவிடும். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸுக்கு அழுத்தமான சூழலை அது உருவாக்கியிருக்கும். ஆனால், அந்த இரு கேட்சுகளும் சரியாக ஃபீல்டிங் செய்யாததால் தவறிவிட்டன. அதன்பிறகு கிடைத்த வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸின் ஓப்பனிங் வீரர்கள் பயன்படுத்திக் கொண்டனர்” என்று விராட் கோலி கூறியது கொஞ்சம் காட்டமாக இருந்தாலும், அதுதான் உண்மை.

கேட்சுகளைத் தவற விடுவது கிரிக்கெட்டில் புதிதல்ல என்றாலும், இரண்டாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவராலும் தவறவிடப்பட்டவை மிக எளிதான கேட்சுகள். வாஷிங்டன் சுந்தருக்கு சிம்மன்ஸ் அடித்த பந்து வானத்தில் பறந்து நிதானமாகவே கீழே இறங்கியது. பொறுமையாக நடந்துசென்று பந்து விழும் இடத்தைக் கணித்து அவர் உட்காரும் வரையில் இருந்த அவகாசத்தைப் பயன்படுத்தியும் தவறவிட்டுவிட்டார் என்பதே இங்கு குறையாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, ரிஷப் பண்ட் அந்த பந்தின் திசையை சுலபமாகக் கணித்திருக்கலாம். ஆனால், பந்துக்கு எதிர்த் திசையில் சென்று அவர் சொதப்பியதால் ஏற்பட்ட தவறு இந்திய அணிக்கு ஒரு தோல்வியைப் பரிசளித்துவிட்டது.

வெளிச்சம் குறைவு மற்றும் ஃப்ளட் லைட்கைன் வெளிச்சத்தில் இந்தத் தவறு நடைபெற்றிருக்கலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘இன்றைய மேட்சில் நான் பிடித்த கேட்ச் கூட லைட் வெளிச்சத்தில் தெரியவில்லை. ஆனால், முதல் டி20 போட்டியில் அப்படி வந்த பந்துக்கு ஒரு கையை நீட்டி நான் செய்த தவற்றால் கேட்சை மிஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது. எனவே, இன்று என்னை நோக்கி வந்த கேட்சுக்கு இரண்டு கைகளையும் நீட்டிப் பிடித்தேன். மைதானத்தில் ஏற்படும் சிரமங்களை இங்கேயே சரிசெய்து ஆட்டத்தில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். லைட் வெளிச்சத்தில் செய்யவேண்டிய மாற்றம் காலப்போக்கில் நடக்கக்கூடியது. அதைக் காரணம் காட்டி மனிதத் தவறுகளைச் சரிசெய்துவிட முடியாது” என்று விராட் கோலி கூறினார்.

Sathish Kumar:

This website uses cookies.