தாதாவின் சாதனையை காலி செய்த தளபதி
2014ம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்தத் பயணத்தின் டெஸ்ட் தொடரில் இருந்து கேப்டன் தோனி அதிரடியாக ஓய்வு பெற்றார். அதுவரை ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவித போட்டிகளுக்கும் தோனி தான் கேப்டனாக இருந்தார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் கைகளுக்கு வந்தது. தோனி எடுத்த அந்த அதிரடியான முடிவில் இருந்து தொடங்கியது தான் விராட் கோலியில் டெஸ்ட் பயணம்.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி சிறப்பான பங்களிப்பை தொடக்கம் முதலே செலுத்தி வந்துள்ளார். சிலர் கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் சரியாக பேட்டிங் செய்ய மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால், கேப்டன் பொறுப்பேற்ற பின்னரும் தன்னுடைய அதிரடியான சதங்களை அவ்வவ்போது அவர் பதிவு செய்து கொண்டே வந்தார். பல நேரங்களில் அவர் ஒன் மேன் ஆர்மியை போல் அணியை தோளில் சுமந்து வந்தார். டெஸ்ட் போட்டியில் 6 இரட்டை சதங்கள் அடித்த ஒரே கேப்டன் கோலிதான்.
விராட் கோலியை பொறுத்தவரை இங்கிலாந்தில் தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டியாகும். முதல் போட்டியில் கோலி சதம் அடித்த போதும் இந்திய அணி போராடி தோற்றது. இரண்டாவது போட்டியில் கோலி உட்பட எல்லா வீரர்களும் சொதப்ப இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில்தான், மூன்றாவது போட்டியில் அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை செலுத்த இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த இரண்டாவது கேப்டன் என்ற மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். 27 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். தற்போது 22 வெற்றிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்பாக 21 வெற்றிகளுடன் சவுரவ் கங்குலி உடன் சமனில் இருந்தார். தற்போது கங்குலியை பின்னுக்கு தள்ளி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளார். தோனியின் வெற்றியை முறியடிக்க அவருக்கு இன்னும் 6 வெற்றிகளே தேவை.
ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை விராட் கோலிதான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதாவது மற்ற கேப்டன்களை காட்டிலும் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளார். 27 போட்டிகளில் தோனி வெற்றி பெற்றிருந்தாலும் அவரது வெற்றி சதவீதம் 45 தான். கங்குலியின் வெற்றி சதவீதம் 42.85 தான். ஆனால், விராட் கோலியின் வெற்றி சதவீதம் 57.89 ஆகும்.