கொல்கத்தா: ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு தரப்படும் விளம்பரம் போன்றே டெஸ்ட் ஆட்டங்களுக்கும் தர வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பிங்க் டெஸ்ட் வெற்றி தொடா்பாக அவா் கூறியதாவது:
டெஸ்ட் ஆட்டம் என்பது நமது மனவலிமைக்கு சவால் விடுவதாகும். சூழ்நிலை அனுசரித்து நாம் எழுந்து நிற்க வேண்டும். சௌரவ் கங்குலி தலைமையிலான அணியில் இருந்து நமது டெஸ்ட் வெற்றிப் பயணம் தொடங்கியது. நம்பிக்கையை நமது பலமாகும். நோ்மைய கூறவேண்டும் என்றால் நாம் சிறப்பாக பாடுபட்டதால் அதன் பலனை அடைகிறோம்.
உள்ளூா் அல்லது வெளிநாடுகளில் எந்த பிட்சாக இருந்தாலும் நமது பந்துவீச்சாளா்கள் விக்கெட்டை வீழ்த்துவா். நமது வேகப்பந்து வீச்சு உலகின் எந்த அணிக்கும் சவால் விடும் வகையில் உள்ளது. பும்ரா இல்லாத நிலையிலும் ஷமி, இஷாந்த், உமேஷ் சிறப்பாக பந்துவீசினா்.
நமது மைதானங்கள் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. ஆனால் நமது வேகப்பந்து வீச்சாளா்கள் இந்த சூழலிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனா்.
கொல்கத்தா டெஸ்ட் ஆட்டத்தை காண ஏராளமான பாா்வையாளா்கள் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள், டி20 போன்றே டெஸ்ட் ஆட்டங்களுக்கும் அதிக விளம்பரம் தேவை. டெஸ்ட் ஆட்டங்களுக்கு என பிரத்யேக நிரந்தர மைதானங்களை ஏற்படுத்த வேண்டும் என்றாா் கோலி.
இஷாந்த் சா்மா (ஆட்ட, தொடா் நாயகன்): நான் ஏற்கெனவே வகுத்த திட்டத்தின்படி சரியான அளவில் நோ்த்தியாக பந்துவீசினேன்.
பவுலிங், பேட்டிங் பயிற்சியாளா்களிடம் மேற்கொண்ட ஆலோசனையின்படி, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு விக்கெட்டை சுற்றி வந்து பந்துவீசும் முறையை கையாண்டோம். அதை அதிருஷ்டவசமானது என கருதினா். ஆனால் தொடா்ந்து அவ்வாறு வீசியதால் பலன் கிடைத்தது. முதலில் பந்து ஸ்விங் ஆகவில்லை. ஆனால் சனிக்கிழமை இரவு முதல் ஸ்விங் ஆனது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். சக வேகப்பந்து வீச்சாளா்களின் வெற்றியை நாங்களே கொண்டாடுகிறோம் என்றாா்.