2022 டி20 உலக கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா..? மாட்டாரா..? என்பது குறித்து விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சார்மா விளக்கம் அளித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்குப்பின் இரண்டு வருடங்கள் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இதன் காரணமாக விராட் கோலியின் எதிர்கால கிரிக்கெட் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் மீண்டும் தன்னுடைய பழைய பார்மிர்க்கு திரும்பி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டி20 தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து தன்னை விமர்சித்தவர்கள் அனைவரையும் வாய் அடைக்கும்படி செய்துள்ளார்.
இது ஒரு புறம் இருந்தாலும் விராட் கோலி இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால் 2022 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விராட் கோலிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, நிச்சயம் விராட் கோலி 2022 உலகப் கோப்பைத்தொடர் மட்டுமில்லாமல் அடுத்த டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடுவார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார் சர்மா தெரிவித்ததாவது, “நான் உங்களுக்கு தற்பொழுது தெரியப்படுத்துவதெல்லாம் நிச்சயம் இது விராட் கோலியின் கடைசி டி.20 உலக கோப்பை தொடர் கிடையாது, விராட் கோலி இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார். அவருடைய பார்ம் மற்றும் உடற்தகுதி மற்றும் ரன்களை அடிக்க வேண்டும் வெற்றியை குவிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவரை அவர் விளையாடுவார். நிச்சயம் விராட் கோலி அடுத்த டி20உலக கோப்பை தொடரிலும் பங்கெடுத்து விளையாடுவார். தற்போதுதான் அவர் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துள்ளார், அவருடைய ஆட்டம் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும், தற்போது விராட் கோலி புத்துணர்ச்சியுடனும், ஆக்ரோஷமாகவும் விளையாடுகிறார். நிச்சயம் விராட் கோலி,எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக முக்கிய பங்காற்றுவார்” என்று ராஜ்குமார் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.