இஷாந்த் சர்மா காயத்திற்கு முன் எப்படி பந்து வீசினாரோ, அதேபோல் தற்போது பந்து வீசுகிறார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் உடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவாரா? ஷுப்மான் கில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதேவேளையில் ரஞ்சி டிராபி போட்டியின்போது காயம் அடைந்த இஷாந்த் சர்மா மீண்டும் அதே உத்வேகத்தில் பந்து வீசுவாரா? அவர் அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இஷாந்த் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர் முதல் டெஸ்டில் களம் இறங்குவார்கள் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.
Photo by Arjun Singh / SPORTZPICS for BCCI
விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா வழக்கம்போல் காணப்படுகிறார். கணுக்கால் காயத்திற்கு முன் எப்படி பந்து வீசினாரோ?, அதுபோல் தற்போது பந்து வீசுகிறார். பந்தை சிறந்த இடத்தில் பிட்ச் செய்கிறார். இரண்டு முறை அவர் நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்தொடரில் விளையாடியுள்ளார். இதனால் அவரது அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிரித்வி திறமையான வீரர். அவரின் ஆட்டமுறையில் அவர் விளையாடி வருகிறார். அதை அவர் பின்பற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட அவர்கள் பதற்றம் அடையக்கூடாது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வால் எப்படி விளையாடினாரோ? அதேபோல் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். நியூசிலாந்தில் பிரித்வி ஷாவால் அதேபோன்று விளையாட முடியும்.
பிரித்வி ஷாவுக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி கூறமாட்டேன். ஏனென்றால் கடந்த ஆண்டு அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். ஆகவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்து வைத்திருப்பார்’’ என்றார்.
இதனால் முதல் டெஸ்டில் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.