இந்தியா அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் கோலி புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 96, ராகுல் 80, கோலி 78, ரோகித் 42 ரன்களை குவித்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆதம் ஜம்பா 3, ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 341 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ டேவிட் வார்னர் (15 ரன்) இந்த முறை நிலைக்கவில்லை. முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் அடித்த ஷாட்டை ‘கவர்’ திசையில் நின்ற மனிஷ் பாண்டே துள்ளிகுதித்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சைனியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய சுமித், துரிதமான ரன்சேகரிப்பில் ஈடுபட்டார். ஸ்கோர் 82 ரன்களை எட்டிய போது, ஆரோன் பிஞ்ச் (33 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார்.
சுமித்-லபுஸ்சேன் ஜோடி தான் இந்தியாவுக்கு கொஞ்சம் குடைச்சல் கொடுத்தது. இந்த கூட்டணியை உடைக்க இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி வியூகங்களை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்குள்ளானார்கள். லபுஸ்சேன் தனது பங்குக்கு 46 ரன்கள் (47 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார்.
இன்னொரு பக்கம் இந்திய பவுலர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஸ்டீவன் சுமித் 98 ரன்களில் (102 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. இதற்கிடையே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் (18 ரன்) குல்தீப் யாதவின் சுழலில் வீழ்ந்தார்.
சுமித் வெளியேறியதும் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. 49.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா 304 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அரைசதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Sathish Kumar:

This website uses cookies.