வெற்றியை கேரளா மக்களுக்கு சமர்பித்த கேப்டன் கோஹ்லி
கனமழை மற்றும் வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு இங்கிலாந்து அணியுடனான வெற்றியை சமர்பிப்பதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய படை, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியுடனான இந்த வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது; “இங்கிலாந்து அணியுடனான இந்த வெற்றியை கேரளா மக்களுக்காக சமர்பிக்க அனைவரும் முடிவு செய்துள்ளோம், அனைவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த வெற்றி நிச்சயம் எங்களுக்கு தேவையானது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது, குறிப்பாக இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தொடரை வெல்ல முயற்சிப்போம்” என்றார்.