அடுத்த போட்டியில் ப்ரிதிவ் ஷா விளையாடுவாரா..? கேப்டன் விராட் கோஹ்லி ஓபன் டாக்
நியூஸிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரிதிவி ஷா சொதப்பினார், முதல் இன்னிங்சில் அவர் கால்களை நகர்த்தாமல் ஆஃப் வாலி லெந்த் அவுட் ஸ்விங்கரில், கிட்டத்தட்ட ராஜர் பின்னி ரக ஸ்விங்கில் பவுல்டு ஆனார், 2வது இன்னிங்சில் அவரை திட்டம் போட்டு குறைந்த ஸ்கோரில் வெளியேற்றியது நியூஸிலாந்து அணி.
இந்நிலையில் ஷுப்மன் கில்லை அணியில் அவருக்குப் பதிலாகச் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.
இதனையடுத்து , ‘இல்லை இல்லை, பிரிதிவி ஷாவுக்கு மாட்டினால் துவம்சம்தான்’ என்று கேப்டன் விராட் கோலி 2வது டெஸ்ட்டிலும் ஷாவுக்கே வாய்ப்பு என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “பிட்சின் தன்மையைப் புரிந்து கொள்வதான் விஷயம். பிரிதிவி ஷா மனத்தளவில் தெளிவாக இருந்தால் அவர் எந்தப் பந்து வீச்சையும் துவம்சம் செய்து விடும் திறமைப் படைத்தவர். நம்மால் முடியும் என்று அவர் நினைத்து விட்டால் பிறகு அந்த ஆட்டமே வேறுதான். நம் அபிப்ராயமும் விரைவில் மாறிவிடும்.
நியூஸிலாந்தில் ரன் குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அந்த சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவர் ஸ்கோர் செய்ய ஆரம்பித்து விட்டால் அவர் தன்னம்பிக்கையும் வளரும்.
ஷா நிச்சயம் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக் கொள்வார், அவர் இயல்பிலேயே அடித்து ஆடக்கூடியவர், இப்போதைக்கு அவர் குறைந்த ரன்களை எடுப்பதை வைத்து அவரை எடை போட முடியாது. பெரிய ஸ்கோர்களை எடுக்கக் கூடியவர் அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிவகைகள் தெரிந்தவர் பிரித்வி ஷா” என்றார் விராட் கோலி.