இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.
ஹெண்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களில் செய்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த பாவுமா, கேப்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய டி காக் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 52 ரன்கள் சேர்த்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது.
பாவுமா 43 பந்துகளில் 3பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் எடுத்தனர். எனவே தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
150 ரன்கள் இலக்குடன் பேட்டிங்கை தொடர்ந்தது இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக ரோஹித் சர்மா 12, ஷிகர் தவாண் 40, ரிஷப் பந்த் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது போட்டி வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது