உமேஷ் விட்ட கேட்சும் அதன் பிறகான சிக்சர்களும்:
16வது ஓவரை கோரி ஆண்டர்சன் வீசினார், பெரிய ஷாட்டை ராயுடு ஆட எட்ஜ் ஆனது. வானில் கொடியேற்றினார், உமேஷ் யாதவ் மெதுவாக ஒரு டீ சாப்பிட்டு விட்டுக் கூட பிடிக்கலாம் அவ்வளவு உயரம் சென்ற பந்து. ஆனால் உமேஷ் கையில் வாங்கி விட்டார். எப்போதும் கிரிக்கெட்டில் கேட்ச் விட்டால் அடுத்து என்ன நடக்கும்? அதுதான் நடந்தது. ஷார்ட் பவுண்டரியான கவரில் ஒரு சிக்ஸ். பிறகு ஆஃப் ஸ்டம்பிற்கு நகர்ந்து டீப் மிட்விக்கெட்டில் ரசிகர்களிடம் தூக்கி அடித்தார், சிக்ஸ்!
24 பந்துகள் 55 ரன்கள் தேவை என்ற போது சிராஜ் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கொடுத்தார், காரணம் தோனியின் வேகமான ஓட்டம். 18வது ஓவரில் மீண்டும் கோரி ஆண்டர்சன் நேராக ஃபுல்லாக வீசினார், ஒரு வேரியேஷனே கிடையாது, தோனி அதனை நேராகத் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து ராயுடுவுக்கு ஒரு ஷார்ட்பிட்சைப் போட்டுக் கொடுக்க நான்கானது.
கடைசி ஓவர் 16 ரன்கள் தேவை. அப்போது கோரி ஆண்டர்சனை விட்டால் வேறு பவுலர் இல்லை, அவர் வந்தார். டி காக் எம்பியும் பிடிக்க முடியாமல் ஒரு பவுண்டரி பறந்தது. மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து இம்முறை பிராவோ ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ரன் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க, ஆண்டர்சன் எப்படியும் தன் பலவீனமான வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்த தோனி ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்தார் ஆனால் அது மீண்டும் ஒரு புல் லெந்த் பந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது, தோனி 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 70 நாட் அவுட், ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்ட்ரைக் ரேட் 205.88!!