சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் அதிகமான நாட்கள் முதலிடத்தில் இருந்து சாதித்துள்ளார்.
928 புள்ளிகள் பெற்றுள்ள விராட் கோலி 2019-ம் ஆண்டில் 274 நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கேன் வில்லியம்ஸன் 822 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
விராட் கோலி தவிர இந்திய வீரர்கள் செட்டேஸ்வர் புஜாரா 5-வது இடத்திலும், அஜின்கிய ரஹானே 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லபுஷேன் தனது சிறப்பான பேட்டிங், சதங்கள் மூலம் தரவரிசையில் 4-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் இந்த ஆண்டு 321 நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா முதலிடத்தில் 44 நாட்கள் இருந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் பிலாண்டர் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தியதால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
(This test match is the first Day / Night Test match that India have taken part in)
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட் 14-வது இடத்துக்கும், ஜோப்ரா ஆர்ச்சர் 40-வது இடத்துக்கும், சாம் கரன் 45-வது இடத்துக்கும் உயர்ந்துள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறார், அஸ்வின் 9-வது இடத்திலும், ஷமி 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் வரிசையில் மே.இ.தீவுகள் வீரர் ஜேஸன் ஹோல்டர் 342 நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார். அடுத்தார்போல் வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன் 23 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியஅணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி முதல் வெற்றியுடன் 30 புள்ளிகள் பெற்று கணக்கை தொடங்கியுள்ளது. நியூஸிலாந்து 60 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 56 புள்ளிகளுடனும், இந்திய அணி 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது