கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற இராட் கோஹ்லி
மெல்போர்ன் டெஸ்டின் வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் இருந்த இளம் கிரிக்கெட் ரசிகருக்கு கேப்டன் விராட் கோலி தனது ஆட்டோகிராப் போட்ட அன்புப் பரிசை வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி என பெருமையை கோலி தலைமையிலான அணி பெற்றது. பெர்த் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி, மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில், 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
37 ஆண்டுகளுக்குப் பின், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற சவுரவ் கங்குலியின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். கங்குலி 28 டெஸ்டில் செய்த சாதனையை, விராட் கோலி 24 டெஸ்டிலேயே செய்துள்ளார்.
இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டின் வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் இருந்த இளம் கிரிக்கெட் ரசிகருக்கு கேப்டன் விராட் கோலி தனது கால் பேடுகளை பரிசாக வழங்கினார்.
அத்துடன், சிறிய பேட்டையும் பரிசாக கொடுத்தார். அனைத்திலும், தனது நினைவாக ஆட்டோகிராப்பையும் போட்டிருந்தார்.
கோலியின் அன்புப் பரிசை பெற்றுக்கொண்ட இளம் கிரிக்கெட் ரசிகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். விளையாடும்போது ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, ரசிகருக்கு பரிசளித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.