இந்திய அணி இன்னும் சில தினங்களில் மிக நீண்ட தொடருக்காக இங்கிலாந்து செல்லவுள்ளது. இதற்காக பத்திரிக்கையை சந்தித்த விராட் கோலி பல கேள்விகளுக்கு சரியான பதில்களை கொடுத்துள்ளார். குறிப்பாக தான் கவுன்ட்டி கிரிக்கெட் ஆடச் செல்லாதது பற்றியும் பேசியுள்ளார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பையும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடுவது, இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும்.
இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இங்கிலாந்து தொடரில் ஜொலிக்கும் நோக்கில், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் கலந்துகொண்டு ஆட கோலி திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரின்போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதால், கவுண்டி கிரிக்கெட்டில் கோலி ஆடவில்லை.
அவர் கூறியதாவது:
திரும்பிப்பார்க்கையில் இப்போது யோசித்துப் பார்த்தால் கவுண்டி கிரிக்கெட்டுக்குச் செல்லாமல் இங்கு உடல்தகுதி நிலையை சரி செய்ததுதான் எனக்கு சிறப்பானதாகத் தெரிகிறது. அங்கு டெஸ்ட்டில் விளையாடி 4 ஆண்டுகள் பெரிய இடைவெளிதான், அதனை அங்கு சென்று புதிதாக சூழ்நிலைகளைக் கிரகிக்க விரும்புகிறேன்.
நான் அங்கு சென்றிருந்தால் 90%தான் திருப்தியடைந்திருப்பேன் ஆனால் இப்போது 110% திருப்தியுடன் இருக்கிறேன். தொடருக்கு முன் நான் புத்துணர்வுடன் இருக்க வேண்டும், ஆகவே இதுவே சரி. ஆனால் இப்படியிருக்க வேண்டும் என்று நினைத்துச் செய்யவில்லை.. அப்படி நடந்து விட்டது.