பத்தாண்டுகளில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் – விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல்! இந்த இரு இந்தியர்களுக்கு ஏன் இடமில்லை? கடுப்பான ரசிகர்கள்!

பத்தாண்டுகளில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிரபல விஸ்டன் பத்திரிகை.

2010 முதல் 2019 இறுதி வரையிலான காலகட்டத்தில் கிரிக்கெட் உலகத்தில் தலைசிறந்து விளங்கிய 5 சிறந்த வீரர்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கை நிறுவனமான விஸ்டன் வெளியிட்டது.

இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் இடம்பெற்றுள்ளார்.  இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே பந்துவீச்சாளரும் இவரே.

அடுத்ததாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

மூன்றாவதாக, இப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய வீரருமான ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். இவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, ஓராண்டு தடைப்பெற்றதை தவிர, இந்த 10 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் இவருக்கு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார்.

நான்காவதாக, தவிர்க்க முடியாத இடத்தில இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து இந்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்து, புதிய உலகசாதனையும் படைத்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 7202 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 11125 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 2633 ரன்கள் என கிடைத்த போட்டிகளில் எல்லாம் ரன்கள் மழை  பொழிந்தார். 69 சதங்கள் மற்றும் 99 அரைசதங்களை இந்த 10 ஆண்டுகளில் அடித்திருக்கிறார்.

இறுதியாக, ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் ஆல்ரவுண்டர் எலீஸ் பெரி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த 5 வீரர்கள் இந்த தசாப்தத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக விஸ்டன் பத்திரிக்கை குறிப்பிட்டது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் ஏன் இடமில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.