கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல; கடுப்பான விராட் கோஹ்லி
கடைசி வரிசை வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என, பேட்ஸ்மேன்களை மறைமுகமாக தாக்கியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தோல்விக்கு காரணம். விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. பவுலர்கள் பேட்டிங் ஆடுவதே பரவாயில்லை என்ற அளவில் தான் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இருந்தது.
முரளி விஜய், ராகுல், தவான், ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சொதப்பிவிட்டனர். பவுலர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்த நிலையில், பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி தோற்றது.
முதல் இன்னிங்ஸிலும் சரி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் கூட விக்கெட்டை விரைவில் விட்டுக்கொடுக்காமல் தடுப்பாட்டம் ஆடினர். முழுக்க முழுக்க பேட்டிங்கின் சொதப்பலால் இந்திய அணி தோற்றது.
போட்டிக்கு பிறகு பேசிய கோலி, இது மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. இப்படியொரு சுவாரஸ்யமான போட்டியில் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு முறை சரிவிலிருந்து மீண்டோம். அதை தொடர்வதற்கு இங்கிலாந்து அணி அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து அணி, எங்களை ரன்னுக்காக போராட செய்தது. எங்களது ஷாட் செலக்ஷன் இன்னும் மேம்பட வேண்டும். முதல் இன்னிங்ஸில் கடைசி வரிசை வீரர்கள் ஆடியவிதம் சிறப்பானது. அவர்களது பேட்டிங்கிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் களத்தில் நிலைத்து நின்றனர். உமேஷ் யாதவ், இரண்டாவது இன்னிங்ஸிலும் ஹர்திக் பாண்டியாவிற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என தெரிவித்தார்.
கடைசி வரிசை வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறியது, பேட்ஸ்மேன்கள் மீதான அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியதாகவே உள்ளது.