கங்குலி, தோனியை விட சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார் என, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாராட்டியுள்ளார்.
2014-ல் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு இரு தொடர்களில் மட்டுமே அவர் தோல்வியடைந்துள்ளார். 2018-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் கோலி தலைமையிலான இந்திய அணி தோற்றது. இந்த வருடம் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், கேப்டன் கோலியை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாராட்டியுள்ளார்.
தோல்வியை கண்டு ஒருவர் அஞ்சினால் ஒரு போதும் வெல்ல மாட்டார் என்றும், தோல்வியை கண்டு கோலி ஒரு போதும் அஞ்சியதில்லை எனவும், அதுதான் அவரது வெற்றிக்கு காரணம் என்றும் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியதால் புதிய உலக சாதனையை படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி உள்ளூரில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை இருமுறை வென்றிருந்தது.