தம்பி விராட்கோலி, இதை இந்தியாவிலேயே விட்டுட்டு வந்துரு; கோஹ்லியை கடுமையாக சாடிய கம்பீர்!!

விராட் கோலி இனிமேல் இதை இந்தியாவிலேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கடுமையாக சாடியிருக்கிறார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடர் சமனில் இருக்கிறது.

முதல் முறையாக தென் ஆபபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த விராட்கோலி, மூன்றாவது டெஸ்டில் மீண்டும் களம் இறங்கினார். நிதானத்துடன் விளையாடிய அவர், இறுதிவரை களத்தில் நின்று 79 ரன்களை முதல் இன்னிங்சில் அடித்தார்.

தனது 71 ஆவது சதத்தை கோஹ்லி தவறவிட்டார். இருப்பினும் அவர் ஆடிய ஆட்டம் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் நிதானத்துடன் இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதானங்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஒரே மாதிரியாக தவறு செய்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது கிடைத்த சிறிது ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் களத்திற்கு வந்திருக்கும் கேப்டன் கோலி, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது நிதானமாக விளையாடினார். இதற்கு முன்னர் செய்த தவறுகளை தவிர்த்துவிட்டு மிகச்சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டார். கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடியதற்கு இதுதான் காரணம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

“விராட் கோலி சிலநேரம் நிதானத்தை விட்டுவிட்டு தனது ஈகோவை முன்னிறுத்தி விளையாடி வருகிறார். என்னால் முடியும் என அனைத்து வீரர்களுக்கும் ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அன்றைய நாளில் எதை செய்தால் சரியாக இருக்கும் என்று நிர்ணயித்து விளையாடுவதே ஒரு வீரருக்கு சிறந்த குணமாக இருக்க முடியும். விராட் கோலி இந்தியாவிலேயே தனது ஈகோவை விட்டு விட வேண்டும்.

சொந்த மண்ணில் என்ன வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கலாம். ஆனால் வெளிநாட்டு மண்ணில் அன்றைய நாள் எப்படி இருக்கிறது? பந்து எந்த அளவிற்கு செயல்படுகிறது? என்று உணர்ந்து பேட்டிங்கை விளையாட வேண்டும். விராத் கோலி போன்ற வீரர் ஒரே மாதிரியான தவறு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தான் இத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்கொள்கிறார். விரைவில் சரி செய்யக்கூடிய வீரர்தான். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிறைய பந்துகளை விட்டுவிட்டு விளையாடினார். இதுதான் தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டும்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.