நானும், டி வில்லியர்சும் சரியாக ஆடாததால் தோற்றோம்: விராட் கோலி

தானும், டி வில்லியர்சும் சரியாக ஆடாததால் டெல்லிக்கு எதிராக தோற்றோம் என  விராட் கோலி கூறியுள்ளார்.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

188 ரன்கள் என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

அந்த அணிக்கு வழக்கம்போல் பார்தீவ் படேல் அதிரடியான தொடக்கத்தை தந்தார். விராட் கோலியும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். இதனால், அந்த அணி முதல் 6 ஓவரில் 64 ரன்கள் எடுத்தது. ஆனால், பவர் பிளேவின் கடைசி ஓவரில் பார்தீவ் படேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

பார்தீவ் படேலை தொடர்ந்து விராட் கோலியும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்த ஏபி டி வில்லியர்ஸ் 19 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே சற்று துரிதமாக விளையாடி வந்த ஷிவம் டூபேவும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, குர்கீரத் சிங் மான் மற்றும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடினர். எனினும் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகமாக இருந்ததால் இந்த ஜோடியால் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை. குர்கீரத் சிங் மான் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் மிஸ்ரா மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல், ரூதர்ஃபோர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ளது. அதேசமயம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

Sathish Kumar:

This website uses cookies.