தன்னலமற்ற பேட்டிங்கால் இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.. ஆஸி., பவுலர்களை கிழித்தெறிந்த அக்ஸர் பட்டேல்.. நல்ல முன்னிலையில் இந்தியா!

விராட் கோலி 186 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 91 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அடித்த 480 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் சுப்மன் கில், சிறப்பாக விளையாடி சதம் அடித்து 128 ரன்களுக்கு அவுட் ஆகினார்.

அதன்பிறகு அணியை பேட்டிங்கில் வழிநடத்திய விராட் கோலி அபாரமாக விளையாடி டெஸ்ட் அரங்கில் தனது 28 வது சதத்தை பூர்த்தி செய்தார். கிட்டத்தட்ட 40 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் சதம் அடிக்கிறார்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் விராட் கோலிக்கு பக்கபலமாக ஆடிய கேஎஸ் பரத் 44 ரன்களுக்கும், ஜடேஜா 28 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் அதிரடியாக விளையாடினார். இவர் வந்த பிறகு இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

அக்ஸர் பட்டேல்-விராட் கோலி ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. 4 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 79 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார் அக்ஸர் பட்டேல். 150 ரன்கள் கடந்து விளையாடி வந்த விராட் கோலிக்கு, கடைசியில் வந்தவர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை என்பதால் இரட்டை சதம் அடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

எப்படியாவது இரட்டை சதம்  அடித்துவிட வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன் அஸ்வின் 7 ரன்கள், உமேஷ் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று பேட்டிங் செய்ய வரவில்லை.

8 விக்கெட்டுகள் இழந்த பிறகு இந்திய அணிக்கு மீதம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்த தருணத்தில் உள்ளே வந்த முகமது சமி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்தார். 2 ஓவர்கள் பொறுத்திருந்த விராட் கோலி, இனியும் பொறுமையாக இருந்தால் சரி வராது, வேகமாக அடிக்கவேண்டும் என்கிற முனைப்பில் இறங்கினார். இந்த முடிவு அவருக்கு சாதகமாக வரவில்லை. இறுதியில் 186 ரன்கள் அடித்திருந்தபோது தூக்கி அடிக்க முயற்சித்து, பிடிபட்டு வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 91 ரன்கள் முன்னிலையும் பெற்றது. நான்காம் நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் எட்டு ஓவர்கள் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

Mohamed:

This website uses cookies.