விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலக வலுதூக்கும் சாம்பியன் மிராபாய் சானு ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
விராட் கோலி ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார், ஆனால், அப்போது நடந்த போட்டியில் அவர் தோல்வி அடைந்ததால், 2-வது முறையாக மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதிர்ஷ்டம் இருந்தால், இந்த ஆண்டு கேல்ரத்னா விருது கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார், இந்திய அணியும் விராட் கோலி தலைமையில் பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ளதால், இந்த விருதை விராட் கோலிக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். .
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட விராட் கோலியின் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் ஒப்புக்கொண்டால், இந்த விருதைப் பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெறுவார். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2007-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனியும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச அளவில் குறைந்தபட்சம் 4ஆண்டுகள் வரை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள வீரர்களைத் தேர்வு செய்து இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கப்படும் வீரர், வீராங்கனைகளின் திறமைகள், திறன்கள், ஆகியவற்றை ஆய்வு செய்து தங்களின் பரிந்துரைகளை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பும். அதன்பின் இறுதியாக குடியரசுத் தலைவருக்குச் செல்லும்.
விராட் கோலி கடந்த 4ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடியுள்ளார். 152 போட்டிகளில் 9006 ரன்கள் குவித்து, சராசரியாக 61.68 ரன்கள் வைத்துள்ளார். 30 சதங்கள், 38 அரைசதங்களை விராட் கோலி விளாசியுள்ளார். 28முறை ஆட்டநாயகன் விருதும், 21 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றுள்ளார்.
வலுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவில் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றார். இந்த ஆண்டு நடந்த காமென்வெல்த் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை சானு வென்றார், ஆனால், ஆசியக் கோப்பைப் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பேட்மிண்டன் வீரர் கிடாம்பி சிறீகாந்த் பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.