கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இந்த டெஸ்ட் போட்டிதான் எனக்கு முக்கியமானது; சிறப்பான சம்பவத்தை நினைவுபடுத்திய கேப்டன் கோஹ்லி!
கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மைல்கல்லாக அமைத்த டெஸ்ட் போட்டி இதுதான் என வரலாற்றை நினைவுபடுத்தியுள்ளார் கேப்டன் கோஹ்லி.
2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதில் குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், முதன்முறையாக விராத் கோலி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்த போட்டியில் காயம் காரணமாக தோனி வெளியில் அமர்த்தப்பட்டு இருந்ததால் கோஹ்லிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இந்த தொடரில் தான் எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியை நினைவுகூர்ந்து மிகவும் “விசேஷமான மற்றும் முக்கியமான டெஸ்ட்” என குறிப்பிட்டார் விராட்கோலி. அடிலெய்டு டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“தற்போதைய இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் முக்கியமான டெஸ்ட் போட்டியை நினைவு கூறுகிறேன். 2014 ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி மிகவும் உணர்வு மிக்கதாக இரு அணி வீரர்களுக்கும் இருந்தது. மைதானத்தில் அதைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் அந்த உணர்வு நிச்சயம் இருந்திருக்கும்.
அந்த டெஸ்ட் போட்டியின் இறுதியில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நிறைய கற்றுக்கொண்டோம் அதிலிருந்து. தனது கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அந்த டெஸ்ட் போட்டி இருந்தது.” என விராட் கோலி பதிவிட்டு இருந்தார்.
மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையும் விராட் கோலியை சேரும்.