பிசிசிஐ கொடுத்த வாய்ப்பை வேண்டாம் என்று விராட்கோலி மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 கேப்டன் விராட் கோலி ராஜினாமா செய்ததிலிருந்து, தொடர்ந்து அவரை பற்றிய சர்ச்சைகள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை பிசிசிஐ நீக்கியது.
இதன் காரணமாக பிசிசிஐ மீது விராட்கோலி அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக அவர் மனதளவில் சிறிது பாதிப்பிற்கு உள்ளாகி அதனை வெளிக்காட்ட முடியாமல் இருந்ததாகவும் அணி வீரர்கள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்க பிறகு யாரும் எதிர்பாராத வகையில், தனது ட்விட்டர் பதிவில் மூலம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக அணி வீரர்கள் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் விராட் கோலி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஜெய் ஷா, இன்னும் ஒரு போட்டி காத்திருந்து அதனை ஃபேர்வெல் போட்டியாக வைத்துக்கள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு, “ஒரு போட்டி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. ஆகையால் நான் வெளியே செல்லும் மனநிலையில் இருக்கிறேன்.” என கூறிவிட்டு, விராட் கோலி வாய்ப்பை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விராட் கோலிக்கு பெங்களூர் மைதானத்தில் வைத்து ஃபேர்வெல் போட்டியாக கொடுக்கலாம். அதன் பிறகு தனது கேப்டன் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தால், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்காது என்று ஜெய் ஷா முடிவு செய்து அவரிடம் இதனை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவை ஒரு புறமிருக்க, ரவி சாஸ்திரி மற்றும் அவரது குழுவினர் பிசிசிஐ ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு, அணியில் இருந்து வெளியேறிய பின்னர், விராட் கோலிக்கு முன்னர் இருந்தது போல முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே அவரது ஆக்ரோஷமும் குறைவாக காணப்பட்டது என்றும் மற்றொரு வட்டார தகவல்கள் வெளிவந்துள்ளன.