தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரிஷப் பந்த்துக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை விருதிமான் சாஹா கவனிப்பார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் சாஹா என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டினார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
விருதிமான் சாஹாவுக்கு காயம் ஏற்பட்ட பின் அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த் மற்ற போட்டிகளில் விரைவாக ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, விருதிமான் சாஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 போட்டிகளில் விளையாடியுள்ள விருதிமான் சாஹா 1,164 ரன்கள் சேர்த்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாஹா விளையாடினார். அதன்பின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
Photo by: Deepak Malik / BCCI/ SPORTZPICS
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பந்த்துக்குப் பதிலாக விருதிமான் சாஹா கவனிப்பார். சாஹா உடல்நலத்தோடு நலமாக இருக்கிறார். முதல் போட்டியில் அணியில் சாஹா இடம் பெறுவார். சாஹாவின் விக்கெட் கீப்பிங் திறமை அனைவருக்கும் தெரிந்தது. உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் சாஹா. எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறப்பாக தனது திறமையை நிரூபித்தும் வருகிறார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை. உள்நாட்டு சூழல் சாஹாவுக்கு நன்கு ஒத்துழைக்கும் என நினைக்கிறேன்.
ரிஷப் பந்த்தைப் பொறுத்தவரை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடினார். இருந்தாலும், சாஹா சிறப்பான தொடக்கத்தை அளிக்கக் கூடியவர். இதனல் தான் பன்ட்டை அணியில் இருந்து நீக்கியுள்ளோம்.