இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,விராட் கோலி 3 மாதம் ஓய்வு எடுத்தால் அவருடைய கிரிக்கெட் கெரியருக்கு நல்லதாக அமையும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.மேலும் இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் பயோ பபில் நெருக்கடி,குடும்பம் போன்ற காரணங்களால் பேட்டிங்கில் விராட் கோலி சரியாக கவனம் செலுத்த முடியவில்லை,இதனால் தான் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறி வருகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இதனால் விராட் கோலியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர்,விராட் கோலி இன்னும் 5 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,இதனால் அவர் தனது கிரிக்கெட் கேரியரை மனதில் வைத்து 2 அல்லது 3 மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் அப்படி செய்தால் விராட் கோலிக்கு மனதளவில் மிகப்பெரும் அமைதியை கொடுக்கும்,மேலும் இதனால் விராட் கோலி தனது பேட்டிங்கில் முழுமையான கவனத்தை செலுத்தலாம். இனி விராட் கோலிக்கு தனது கடைமை என்னவென்பது நன்றாகவே தெரியும்,அதை விராட் கோலி சரியாக செய்வார், நிச்சயம் இந்திய அணியில் விராட் கோலி 4 வருடங்கள் ராஜாவாகவே வலம் வருவார் என்று விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.