கங்குலி கிட்ட பேச பெரிய லிஸ்டே இருக்கு; விராட் கோஹ்லி சொல்கிறார்
சவுரவ் கங்குலியுடன் விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் தலைவராக கடந்த புதன் கிழமை சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்புக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல மட்டங்களில் சிறப்பாக செயல்பட தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலியுடனான அவரது நட்பு எவ்வளவு இணக்கமாக இருக்குமென விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள கங்குலியுடன் என்ன மாதிரியான விஷயங்களை கலந்தாலோசிக்க உள்ளீர்கள் என்று கோலியிடன் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் மிக வெளிப்படையாக பதிலளித்து உள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கோலி, “முன்பும் அவருடன் கலந்து ஆலோசித்துள்ளேன். நாங்கள் இருவரும் சேர்ந்து காபி அருந்த வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நிறைய விஷயங்கள் பற்றி ஆலோசித்துள்ளோம். எங்களுக்குள் ஆரோக்கியமான உரையாடலை எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம்.
இன்றைய நிலையில் அவருடன் விவாதிப்பதற்கான நிறைய விஷயங்கள் உள்ளன. பெரிய பட்டியலே உள்ளது. இந்திய அணிக்கு என்னத் தேவை உள்ளது. இதில் என்ன விஷயங்கள் முக்கியமானவை, எந்தக் காரியங்களில் அதிக கவனத்தை வேண்டும் என்பதை பற்றி விவாதிப்போம். என்னைப் பொறுத்தளவில் முன்பு அவருடன் நன்றாக கலந்தாலோசித்து உள்ளேன். இனிமேலும் அப்படியே கலந்தாலோசிக்க உள்ளேன்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.