வீண் விமர்சனத்திற்கு பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை என்று கேப்டன் விராட் கோலி கோபமாக பேட்டி அளித்திருந்தார்.
3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் டீன் எல்கர் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்திற்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. இந்த முடிவிற்கு மேல்முறையீடு செய்த டீன் எல்கருக்கு அவுட் இல்லை என்று சாதகமாக முடிவுகள் கொடுக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது என்னவென்றால், பந்து ஸ்டம்பில் அடிக்காமல் மேலே சென்று விட்டது என தொழில்நுட்பம் மூலம் கொடுக்கப்பட்ட முடிவுதான். சுழல் பந்துவீச்சாளர் வீசிய பந்தை எப்படி ஸ்டம்பை அடிக்காமல் மெலே சென்றிருக்கும் என்று கேப்டன் கோலி கோபப்பட்டார். இத்தனைக்கும் பந்து காலின் நடுபகுதியில் பட்டது.
தனது கோபத்தை ஸ்டம்ப் மைக் மூலம் வெளிப்படுத்தினார் விராட் கோலி. இதற்கு ஒளிபரப்பு நிறுவனமான சூப்பர் ஸ்போர்ட் நிறுவனமும் பதில் அளித்து விட்டது. ஆனால் தவறுதலாக முடிவு கொடுக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்த இந்திய வீரர்கள் அதிலிருந்து இறுதிவரை மனதளவில் மீளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
இறுதியில் இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி கூறுகையில், “உள்ளே என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு அது பற்றி தெரியாது. ஆகையால் அவர்களது விமர்சனத்திற்கு நான் பதிலளிக்க விருப்பமில்லை. மேலும் கொடுக்கப்பட்ட முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தருணத்தில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகள் எடுக்க தவறிவிட்டோம். அதுதான் போட்டியை எங்களிடமிருந்து தட்டிச் சென்று விட்டது.
மேலும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் போதிய அளவில் அழுத்தத்தை நாங்கள் கொடுக்கவில்லை. எளிதாக ஒன்று அல்லது இரண்டு ரன்களை விட்டுக்கொடுத்து அழுத்தத்தை குறைத்துவிட்டோம். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அழுத்தம் ஏற்படுத்தாமல் எளிதாக ரன்களை குவித்து விட்டனர். இதற்காக தென்னாப்பிரிக்க அணியை குறைத்து மதிப்பிடவில்லை. இறுதியாக எந்த அணி பலமாக இருக்கிறதோ, அந்த அணியே வெற்றியைப் பெறமுடியும். வெற்றி என்பது அதிர்ஷ்டத்தில் வருவது இல்லை.” என்றார்.