இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது தற்போது மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா பி.சி.சி.ஐ விதிமுறைகளை மீறியதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கேப்டன் விராட்கோலி இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் அவர் குறிப்பிட்டுள்ள இந்த புகாரை ஏற்றுக்கொண்ட நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயின் விரைவில் இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி கிரிக்கெட்டில் சம்பாதிக்கும் பணம் மட்டுமின்றி பல்வேறு விளம்பரங்களிலும், பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் தனி வருமானத்தை ஈட்டி வருகிறார்.
மேலும் விராட் கோலி கார்னர் ஸ்டோன் வென்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கும், விராட்கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் விராட் கோலியுடன் அமித் அருண் சஜ்தே, பினாய் பாரத் ஆகியோர் கார்னர் ஸ்டோன் ஸ்போட்ஸ் அண்ட் என்டர்டெய்மெண்ட் நிறுவனத்தில் இயக்குனர்களாக இயங்கி வருகிறார்கள்.
ஆனால் கோலிக்கு கார்னர் ஸ்டோன் நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லை இருப்பினும் இந்த நிறுவனம்தான் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரது வணிக நலன்களை கவனித்து வருகிறது இதனை குறிப்பிட்டுள்ள சஞ்சய் குப்தா கோலியின் மீது இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை நிர்வகித்து வருவதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி பிசிசிஐ விதிமுறை 38 (4) என்ற விதிமுறையை விராட்கோலி மீறியுள்ளார். அதாவது ஏதாவது ஒரு பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்பதுதான் புகார்தாரர் சஞ்சய் குப்தாவின் வாதம் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர் இயக்குனராக இருக்கும் நிறுவனமொன்றில் பிற வீரர்களின் வணிக ஒப்பந்தங்கள் கையாளுதல் என்பது சிக்கலான ஒரு விடயம் ஆகும்.
ஏனெனில் இந்த வணிக ஒப்பந்தங்கள் நிர்வகித்தல் மூலமாக இந்திய அணியின் தேர்வில் குளறுபடிகள் நடக்க காரணமாக வாய்ப்பு உள்ளது என்றும் சிலர் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கினை எடுத்து விசாரிக்க நன்னடத்தை அதிகாரி டி.கே ஜெயின் தனிக் குழுவை அமைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.