பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லை… விராட் கோலியால் எல்லா டீமுக்குமே இந்த தடவ பிரச்சனை தான்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் உறுதி !!

பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லை… விராட் கோலியால் எல்லா டீமுக்குமே இந்த தடவ பிரச்சனை தான்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் உறுதி

எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்த கூடிய ஆபத்தான பேட்ஸ்மேனாக இருப்பார் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி, அடுத்ததாக அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக்கோப்பை தொடரே தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தின் பேசு பொருளாக இருப்பதால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான முகமது ஆமீர், உலகக்கோப்பையில் விராட் கோலி அதிக ஆபத்தான வீரராக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது ஆமீர் பேசுகையில், “கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாடிய விதம் அபாரமானது. அந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது என்பதே உண்மை. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்கள் 48 ரன்கள்  தேவை என்ற நிலை இருந்தது, முன்னாள் வீரரான வகாப் ரியாஸும் என்னுடன் இணைந்து அந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தார். கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் எடுப்பது சாதரண விசயம் இல்லை என்றாலும், விராட் கோலி களத்தில் இருக்கும் வரை இந்திய அணி தோல்வியடையாது என நான் வகாப் ரியாஸிடம் உறுதியாக கூறினேன். அந்த போட்டியில் விராட் கோலி விளையாடியதை போன்று வேறு எந்த ஒரு வீரராலும் விளையாட முடியாது. விராட் கோலியால் மட்டுமே இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும். விராட் கோலியின் அகராதியில் பயம் அல்லது அழுத்தம் என்றே வார்த்தையே கிடையாது. எதிர்வரும் உலகக்கோப்பை தொடரிலும் விராட் கோலி அதிக ஆபத்தான பேட்ஸ்மேனாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. விராட் கோலியால் அனைத்து அணிகளுக்குமே பிரச்சனை தான், அவர் தற்போது அதிக நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார், முன்பை விட மிக சிறந்த பார்மிலும் உள்ளார்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.