இந்த தவறுக்காக விராட் கோலி நிச்சயம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியில் கடந்த சில வாரங்களாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருபவர் விராட் கோலி. முன்னதாக தனது கேப்டன் பொறுப்பு ராஜினாமா குறித்து விமர்சனத்திற்கு உள்ளானார். தற்போது தென்னாபிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரியான தவறு செய்து ஆட்டம் இழந்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
ஜாம்பவான்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றோரும் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா ஆர்பி சிங், இர்பான் பதான் போன்றோரும் இந்த தவறு குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
முதல் இன்னிங்சில் உடலை விட்டு வெளியே சென்ற பந்தை அடிக்க முயற்சித்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விராட்கோலி. இரண்டாவது இன்னிங்சில் அதே போன்ற ஒரு பந்தை மீண்டும் ஒருமுறை கவர் திசையில் அடிக்கும் முயற்சித்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர் இப்படி அடுத்தடுத்த இன்னிங்சில் ஒரே மாதிரியான தவறை செய்து ஆட்டம் இழந்ததால் இத்தகைய விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆட்டமிழப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் பல போட்டிகளில் இப்படியான ஒரு முறையில் ஆட்டம் இழந்திருக்கிறார்.
விராட்கோலி இந்த தவறான ஷாட் குறித்து இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “அப்படி வெளியே சென்ற பந்தை ஆட முயற்சித்ததற்காக விராட்கோலி நிச்சயம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். உணவு இடைவேளை முடிந்து, முதல் பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். போதிய அளவில் கவனம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதைத் தவிர இந்த விவகாரத்தில் ஆழமாக கருத்தை சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இத்தனைக்கும் விராட் கோலிக்கு வீசப்பட்ட பந்து நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்பில் செல்லவில்லை. குறைந்தபட்சம் ஏழாவது அல்லது எட்டாவது ஸ்டம்ப்பில் சென்றுகொண்டிருந்தது. தொடர்ச்சியாக அவர் அதை அடிக்க முயற்சித்து தோல்வியுற்று இருக்கிறார். கவர் திசையில் விராட்கோலி மிகச் சிறப்பாக விளையாடுவார். அந்த ஒரு நம்பிக்கையில் அப்படியான ஷாட்டை அடிக்க முயற்சித்திருப்பார் என நான் நினைக்கிறேன். விரைவில் இதனை சரி செய்வதற்கு ஒரு வழியை அவர் கண்டுபிடிக்க வேண்டும்.” என அறிவுறுத்தினார்.