வரலாறு படைத்த இந்த இந்திய அணியின் பேட்டிங்தான் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஆடிய சிறந்த இந்திய பேட்டிங் வரிசை என்று கூற முடியாது என்று இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் இயன் சாப்பல் கூறியதாவது:
இந்த இந்திய அணி சிறந்த வேகப்பந்து கூட்டணியாகும், இந்தியாவிலிருந்து வந்த அணிகளில் இந்தப் பந்து வீச்சுக் கூட்டணி சிறந்தது, சிறந்த பீல்டிங் அணியாகவும் உள்ளது.
ஆனால் இது சிறந்த பேட்டிங் அணி என்று கூற முடியாது, இந்த அணியை விட சிறந்த பேட்டிங் வரிசையை நான் இதற்கு முன் கண்டுள்ளேன்.
இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பவுலிங் வரிசையை முறியடித்து விட்டனர். நிறைய ஸ்விங் செய்கின்றனர். ஆஸி. பவுலர்களுக்கு ஸ்விங் கை கூடவில்லை. பந்தின் தையலை மிக அருமையாக நிலைப்படுத்துகின்றனர் இந்த இந்திய வீச்சாளர்கள், பந்தை ஃபுல் லெந்தில் வீசுகின்றனர், இதனால்தான் ஆஸ்திரேலியர்களை விட அதிக ஸ்விங் அவர்களால் செய்ய முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.
இந்தியா தொடரை வெல்ல புஜாராவும் (521 ரன் குவிப்பு), பும்ராவும் (21 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர்.
ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர். அதன் விவரம்:-
தெண்டுல்கர்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான நாள் ஆகும். இதை பொக்கிஷமாக கருதுகிறேன். இந்திய வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
பேட்டிங்கில் புஜாரா மாறுபட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் இணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ரிசப்பன்ட், குல்தீப் யாதவ் அணிக்கு மேலும் பலம் சேர்க்க கூடியவர்கள்.
கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட்டை வீரர்கள் பெருமை அடைய செய்து விட்டனர். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். அந்த தருணங்கள் மிகவும் சிறப்பானது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சாதித்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. உடல் தகுதியிலும் சிறப்பாக உள்ளது. இதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னர் இல்லாதது இந்தியாவின் தவறு அல்ல. ஆஸ்திரேலிய அணி தான் அவர்கள் இல்லாமல் களம் இறங்கியது. இருவரது தடை காலத்தை குறைத்து இருக்கலாம்.
கங்குலி: இது ஒரு வெறித்தனமான வெற்றியாகும். இந்திய வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். 400 முதல் 600 ரன்கள் வரை குவித்தது மிகவும் முக்கியமானது. புஜாரா, பும்ரா அபாரமாக செயல்பட்டு தொடரை வெல்ல காரணமாக இருந்தார்கள்.