விண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது விராட்கோலி இந்திய மண்ணில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்த விண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் கேப்டன் விராட்கோலி 70 ரன்களும், தொடக்க வீரர்களான ரோகித்சர்மா 71 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 91 ரன்களும் எடுத்து, இந்திய அணி டி20 அரங்கில் 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட உதவினர்.
சர்வதேச டி20 போட்டிகளில், ஒரே இன்னிங்சில் 3 பேட்ஸ்மேன்கள் 70 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஒரே ஸ்கோருடன் சமநிலையில் உள்ளனர்.
கேப்டன் விராட் கோலி 70 இன்னிங்சில் 2633 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோகித் சர்மா 96 இன்னிங்சில் 2633 ரன்னும் எடுத்த்திருக்கிறார்.
விராட் கோலி டி20 அரங்கில் 24 அரை சதம் எடுத்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட அடித்தது இல்லை. முதல் டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.
அதேநேரம், ரோகித்சர்மா 4 சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 4 சதங்கள் இதுவரை எவரும் அடித்ததில்லை. காலின் முன்ரோ 3 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
3வது டி20 போட்டியில், விராட் கோலி 6-வது ரன்னை எட்டியபோது, சொந்த (இந்தியா) மண்ணில் 1000 ரன் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்தார்.
கோலி 21 பந்தில் அரை சதத்தை தொட்டார். அவரது அதிவேக அரை சதம் இதுவாகும். இந்தியாவின் 5-வது அதிவேக அரை சதமாகும்.
யுவராஜ்சிங் 3 முறையும் (12 பந்து, 20 பந்து, 20 பந்து), காம்பீர் ஒரு முறையும் (19 பந்து) அரை சதத்தை அதிவேகத்தில் எடுத்து இருந்தனர்.