ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பண்டிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சரியானது தான் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது சரிதான் என்று சிலரும், ரிஷப் பண்ட்டை நீக்கியிருக்க கூடாது என சிலரும் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் வீரரான சேவாக்கும் இது குறித்து தனது கருத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், “ரிஷப் பண்ட் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. கடைசி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ராகுல் தான் நிரந்தர விக்கெட் கீப்பர். ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்.
ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை முன்னேற்றி கொள்ள வேண்டும், தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றி கொள்ள வேண்டும், இல்லையெனில் இந்திய அணியில் இருந்து முழுமையாக புறக்கணிப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தோனி வருவதற்கு முன், எங்கள் காலத்தில் சரியான விக்கெட் கீப்பர் இல்லாததால், ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக பயன்படுத்தப்பட்டார். டிராவிட் விக்கெட் கீப்பிங் செய்ததால், கூடுதல் பேட்டிங் ஆப்சன் கிடைத்தது. ரிஷப் பண்ட் நல்ல கீப்பர் தான் என்றாலும், அவரது ஆட்டம், கோஹ்லி மற்றும் சாஸ்திரிக்கு திருப்தியளிக்கவில்லை. ரிஷப் பண்ட் தான் அவரது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். போட்டியை முடித்துக்கொடுக்க ரிஷப் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.