இவரை அணியில் எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்; பஞ்சாப் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் சேவாக்
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி கிரிஸ் கெய்லுக்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பே கிடைக்கும் என்பதால், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் பஞ்சாப் அணிக்கு தங்களது ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னாள் ஆலோசகருமான விரேந்திர சேவாக்கும் பஞ்சாப் அணிக்கான தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், “பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி கிரிஸ் கெய்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பெங்களூர் அணிக்கு எதிராக கிரிஸ் கெய்லின் சாதனைகளும் ஏராளம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மாயன்க் அகர்வாலுடன் சேர்த்து கிரிஸ் கெய்லை துவக்க வீரராக களமிறக்க வேண்டும். கே.எல் ராகுல் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும், அது பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரையும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார்.