கோஹ்லிக்காக இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள்; பாகிஸ்தானுக்கு வகாப் ரியாஸ் அட்வைஸ்
2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் அணி தற்போதே தயாராகி கொள்ள வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் வகாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
டி.10 லீக் தொடரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இறுதி போட்டியில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனையடுத்து நார்த்தர்ன் வாரியர்ஸ் அணியில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வகாப் ரியாஸ் தற்போதைய கிரிக்கெட் குறித்து பலவற்றை மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவிற்கு இவர் அளித்துள்ள ப்ரேத்தியேகே பேட்டியில் கூறியிருப்பதாவது,
2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் தற்போதில் இருந்தே தயாராகி கொள்ள வேண்டும். குறிப்பாக இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை கடுப்படுத்த தேவையான வியூகங்களை தற்போதே தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதே வேளையில் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கொண்டு, மற்ற வீரர்களையும் அடிக்க விட்டுவிட கூடாது, இந்திய அணியை வீழ்த்துவதற்கான யுக்திகளை முதலில் வகுத்து கொள்ள வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது போலவே உலகக்கோப்பையையும் பாகிஸ்தான் அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றும், கைப்பற்றாது என்பதை விட சாம்பியன்ஸ் டிராபியில் செயல்பட்டதை போலவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நார்த்தர்ன் வாரியர்ஸ் அணி சாம்பியன்;
டி20 லீக் தொடரை போல டி10 லீக் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவந்தது.
இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று முன்தினம் ஷார்ஜாவில் நடந்தது. இதில் டேரன் சமி தலைமையிலான நார்தர்ன் வாரியர்ஸ் அணியும் ஷாகித் அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த நார்தர்ன் வாரியர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 140 ரன்களை குவித்தது.
141 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாக்டூன்ஸ் அணி வீரர்கள் தங்களால் முடிந்தவரை அடித்து ஆடி போராடினர். ஆனால் யாருமே பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை என்பதால் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 10 ஓவர் முடிவில் 118 ரன்களை மட்டுமே எடுத்தது அந்த அணி.
இதையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நார்தர்ன் வாரியர்ஸ் அணி டி10 தொடரை வென்று அசத்தியது.