ரோஹித் ஷர்மா, பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மென்கள் தான்,ஆனால் இந்த வீரரை சமாளிப்பது கடினம்; மனம் திறந்த வகாப் ரியாஸ்!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது தலைசிறந்த 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான முறையில் செயல்பட்டு பல முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு பல முறை வெற்றியை பெற்று கொடுத்துள்ள வகாப் ரியாஸ் தற்பொழுது இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தநிலையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தனக்கு விருப்பமான சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் குறித்து மனம் திறந்து வகாப் ரியாஸ் பேசியுள்ளார்.

தலைசிறந்த 5 பந்துவீச்சாளர்கள்

தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக பாகிஸ்தான் அணியின் சகீன் அஃப்ரிடி,ஹசன் அலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்,இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹாசரங்கா ஆகிய ஐந்து வீரர்கள் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களை குறித்து பேசிய வகாப் ரியாஸ், மேலே சொல்லப்பட்டுள்ள பந்துவீச்சாளர்கள் தங்கள் மனதில் என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ அதனை செயல்படுத்தும் திறமை படைத்தவர்கள், யார்க்கர் போட வேண்டுமென்றோ அல்லது ஸ்லோ பால் போட வேண்டுமென்று நினைத்தாலும் அதை மிக கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர்கள் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும் ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடும் தனது சக வீரரான ஹசரங்கா குறித்து பேசிய வகாப் ரியாஸ் சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த லெக்ஸ்பின்னர் என்றால் அது ஹசரங்கா தான் என்று பாராட்டிப் பேசினார்.

சிறந்த பேட்ஸ்மேன்கள்

எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவதற்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று வகாப் ரியாஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

இந்த இரு வீரர்களுக்கு பந்து வீச வேண்டும் என்பது மிகப்பெரும் கடினமான விஷயமாகும்,ஆனால் இவர்களை விட நான் சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பந்து வீசுவதற்கு பயப்படுவேன், ஏனென்றால் அவர் நாம் எந்த மாதிரி பந்துவீச போகிறோம் என்பதை நன்கு உணர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.