மூன்று போட்டிக்களிலும் இவரை விளையாட வையுங்கள்! விவிஎஸ் லட்சுமனன் அட்வைஸ்!

சூர்யகுமார் யாதவ் மும்பை அணியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். முதல் போட்டியிலேயே மிக அபாரமாக அரைசதம் குவித்து அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பினார். நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் இவர் விளையாடுவார் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் தற்போது பதிந்துள்ளது.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த அனைத்து போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடி ஆகவேண்டும் என்று தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தன்னுடைய வேண்டுகோளை வலியுறுத்தியுள்ளார்.

அவருடைய ஊக்கத்தை இந்திய அணி அதிகரிக்க வேண்டும்

சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய வேளையில் நிச்சயமாக இவர் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்கிற நம்பிக்கை அனைத்து ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ஆசை இருந்தது. தற்பொழுது அது நிறைவேற போகிறது.

இலங்கை அணிக்கு எதிராக ஷிகர் தவான் தலைமையின் கீழ் அவர் விளையாடப் போகிறார். இந்த தொடரில் அவருக்கு நிறைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் அவரது ஊக்கம் அதிகரிக்கப்படும். இந்திய கிரிக்கெட் அணிக்கு அது பின்னாளில் பல நன்மைகளை பெற்று தரும் என்றும் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியிருக்கிறார்.

குறிப்பாக இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்காக அவர் 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடிய விதம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற பந்துவீச்சாளர் எதிர்முனையில் பந்துவீசிய வேளையில் மிக கூலாக அவர்களை அடைய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

அவர் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலப்படும். உலக கோப்பை டி20 தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் இவரது நம்பிக்கையையும் திறமையையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சரியாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மன் இறுதியாக கூறி முடித்தார்.

இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாட தயாராகிறேன்

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இலங்கைக்கு எதிராக விளையாடு வதற்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும் இலங்கைக்கு எதிரான தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகிக் கொண்டு வருவதாகவும் சமீபத்தில் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்பத்தில் நான் விளையாடத் துவங்கும் பொழுது, இந்த இடத்தில் தான் நான் விளையாடுவேன் என்று ஒரு பொழுதும் நான் கூறியதில்லை. எனக்கு எந்த இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் என்னுடைய முழு பங்களிப்பையும் வழங்கி வந்தேன். அதேபோல இந்திய அணியிலும் எனக்கு எந்த இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் களம் இறங்கி என்னுடைய முழு பங்களிப்பையும் நான் நிச்சயமாக வழங்குவேன் என்றும் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டது குறித்த கேள்விக்கு, அந்த தொடரில் நான் மிகச் சிறப்பாக விளையாடினேன். அது முடிந்து போன கதை, தற்பொழுது புதிய தொடர் வருகிறது. இந்த தொடரை நான் புதிய தொடராக தான் பார்ப்பேன். இதில் என்னுடைய முழு பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்று இறுதியாக சூர்யகுமார் யாதவ் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.