தன் வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறும் அதிரடி தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், இந்திய அணியை 3-0 என்று வெல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 12/3 என்ற நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ் ரக இன்னிங்ஸில் புவனேஷ்வர் குமாரை ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து போட்டியை மாற்றிய டிவில்லியர்ஸ், செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் மீண்டும் 80 ரன்களை விரைவு கதியில் எடுத்து வெற்றி வாய்ப்பை தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக்கினார் டிவில்லியர்ஸ்.
இவையெல்லாம் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ்கள், ஆனால் டிவில்லியர்ஸைப் பொறுத்தவரை இது நார்மலான ஆட்டமே.
“பந்தைப் பார்க்கிறேன் ஆடுகிறேன். மூன்று வடிவங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று நான் எப்போதுமே கூறிவந்துள்ளேன். பிட்ச் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளும் மன அமைப்பு. இப்படித்தான் எப்பவுமே ஆடுகிறேன். எனவே நான் என் மேல் திணித்துக் கொண்டு இப்படித்தான் ஆட வேண்டும் என்று ஆடவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்தான் உடனடியான சவால், உள்ளபடியே முக்கியமான நல்ல தொடரை வென்றதில் ஒரு அங்கமாக திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் பீல்டிங் முதல் பவுலிங் வரை, நெருக்கடியான தருணங்களில் பேட்டிங் என்று இது ஒரு அணியாக திரண்டு எழுந்து பெற்ற வெற்றியாகும். நான் என் கிரிக்கெட்டை மற்றவர்களுடன் மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன். இரண்டு கிரேட் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளோம்.
நான் என் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருப்பதாக உணர்கிறேன். முடிவுகள் பற்றி உத்தரவாதங்கள் இல்லை. தொடர்ச்சியாக 5 சதங்கள் அடிப்பேன் என்ற உத்தரவாதம் இல்லை, தொடர்ச்சியாக 5 டக் அவுட் கூட ஆவேன். ஆனால் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றாக ஆடுகிறேன், பந்துகளைச் சரியாக சந்திக்கிறேன். நான் என் தயாரிப்பை நன்றாகச் செய்கிறேன்.
2015-ல் இந்தியத் தொடரில் என்ன நடந்தது என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆம். ஒருநாள் தொடரை வென்றோம். இந்தத் தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சு என்னையும் அணியினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்திய அணியை 3-0 என்று வீழ்த்த விரும்புகிறோம். ஆனால் முடிவு உத்தரவாதம் அல்ல. கடைசி டெஸ்ட் போட்டியிலும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொண்டு சிறந்த கிரிக்கெட்டை ஆடுவோம் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார் டிவில்லியர்ஸ்.