திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…புதிய சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம், டேவிட் வார்னர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் சென்னையில் நேற்று துவங்கியது. நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை செய்து வருகிறது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்த கூட்டணி, மளமளவென ரன் குவித்தது. இந்த போட்டியில் 85 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், ஐ.பி.எல் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கவுதம் கம்பீரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், இதுவரை 36 அரைசதங்கள் அடித்திருந்தார், இவரின் இந்த சாதனையை தான் டேவிட் வார்னர் தற்பொழுது முறியடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், கடந்த ஒரு வருட தடை காலத்திற்கு பிறகு இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்துள்ள ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்து, கொல்கத்தாவிற்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .
ஐ.பி.எல் போட்டிகள் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்;
டேவிட் வார்னர் – 37
கவுதம் கம்பீர் – 36
சுரேஷ் ரெய்னா – 35
விராட் கோஹ்லி – 34
ரோஹித் சர்மா – 34