தவானை இழந்த டெல்லி அணி மிகக் குறைந்த விலைக்கு டேவிட் வார்னரை தட்டி தூக்கியுள்ளது.
பதினைந்தாவது ஐபிஎல் சீசனுக்கு முன்பாக கோலாகலமாக பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக இரண்டு அணிகள் இணைந்திருப்பதால் ஐபிஎல் ஏலம் இன்னும் களைகட்டியிருக்கிறது.
பல அணிகள் தங்களது பழைய வீரர்களை தக்க வைக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் டு பிளசிஸ், தக்க வைக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் இழந்திருக்கிறது சென்னை அணி. பெங்களூரு அணி அவரை 7 கோடி ரூபாய்க்கு எடுத்து அசத்தி இருக்கிறது.
ஷிகர் தவான் டெல்லி அணிக்காக கடந்த சில ஆண்டுகள் விளையாடி வந்தார். நல்ல துவக்கமும் அமைத்து கொடுத்துவந்தார். தற்போது அவர் 8.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரையும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. அஸ்வின், டு ப்லஸ்ஸிஸ், குவின்டன் டி காக் போன்றவர்களை எடுக்க முயற்சி செய்தும் விலை அதிகமாக சென்றதால் விட்டுவிட்டது.
2014ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த டேவிட் வார்னர், ஒரு முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஹைதராபாத் அணி மற்றும் வார்னர் இருதரப்புக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதன் நீட்சியாக இம்முறை அவரை ஹைதராபாத் அணி தக்க வைக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற அவரை எடுக்க குஜராத், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் முன்வந்தன. இறுதியில் டெல்லி அணி அவரை போராடி 6.25 கோடி ரூபாய்க்கு எடுத்துவிட்டது.
குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் வரை அவர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7 கோடிக்கும் குறைவாக அவரை எடுத்தது மிகச்சிறந்த ஏலமாக பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி அணிக்கு அவர் கேப்டனாகவும் மாறலாம் என்று கணிப்புகளும் முன்வருகின்றன.