இந்த தமிழக வீரர் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தருவார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய சுழல் பந்துவீச்சாளர் லட்சுமணன் சிவராமகிருஷ்ணன்.
வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதி வரும் ஒருநாள் தொடர் டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்திருக்கிறது. மூன்றாவது போட்டி டிசம்பர் 10ல் நடக்க உள்ளது.
பங்களாதேஷ் தொடரில் இந்திய அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் முதல் ஒருநாள் போட்டியில் 5 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் கடைசி நேரத்தில களமிறங்கி 15 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஒருநாள் போட்டியில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தி வருகிறார்.
பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்-க்கு இந்திய அணியில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அணி நிர்வாகம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
“வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர். எந்த கண்டிசனிலும் பேட்டிங் செய்யக்கூடியவர். அவரை நம்பி களமிறக்கிவிட்டால் குறிப்பிட்ட ரன்களை அடித்து கொடுப்பார். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது என எந்த இடத்திலும் அவரை களமிறக்கி விடலாம். தற்போது இந்திய அணியில் இருக்கும் ஹார்திக் பாண்டியாவை போல இவரை பயன்படுத்தலாம். மேலும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கிறார். பத்து ஓவர்கள் முழுமையாக வீசக்கூடிய பந்துவீச்சாளராக இருக்கிறார். இன்னும் அதிக தாக்கத்துடன் பந்து வீசவேண்டும் என்ற மனநிலையை அவருக்கு இந்திய அணி உருவாக்க வேண்டும். நிச்சயம் இன்னும் பல திறமைகளை அவரிடம் இருந்து வெளிக்கொண்டு வந்தால் இந்திய அணிக்காக இன்றியமையாத ஆல்ரவுண்டராக வருவார்.” என்றார்.