சச்சினைவிட எங்க ஊரு பேட்ஸ்மேன் தான் “பெஸ்ட்” – வாயவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட பாகிஸ்தான் ஜாம்பவான்!
சிறந்த 5 பேட்ஸ்மேன் பட்டியலில் சச்சினை விட இந்த பாக்., வீரர் தான் பெஸ்ட் எனக்கூறி வம்படியாக நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் பாக்., முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம், உங்களது காலகட்டத்தில் உங்களுடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடிய வீரர்களில் தலைசிறந்த 5 பேட்ஸ்மேன்களை வரிசையாக கூறும்படி இணைய நிகழ்ச்சி ஒன்றில் கூறப்பட்டது.
வாசிம் அக்ரமும் தனது பட்டியலை வெளியிட்டார். அதில், விண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு முதலிடம் கொடுத்தார். அடுத்ததாக இவரது பட்டியலில், நியூஸி., அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் இரண்டாம் இடத்திலும், விண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா மூன்றாம் இடத்திலும் இருந்தனர். 4வது இடத்தில் தனது சொந்த நாட்டின் வீரரான இன்சமாம் உல் ஹக் இடம்பெற்றிருந்தார். 5வது இடம் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினுக்கு வழங்கப்பட்டது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து எண்ணற்ற சாதனைகளை படைத்தவரான சச்சின் தெண்டுல்கரை ‘கிரிக்கெட் உலகின் கடவுள்’ என அனைவரும் அழைப்பர். இந்நிலையில், அவருக்கு போனால்போகட்டும் எனகின்றவாறு 5-வது இடம் கொடுக்கப்பட்டதை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
எழுந்த விமர்சனத்திற்கு பிறகு, இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது, “இந்த வரிசையில் நான் தெண்டுல்கருக்கு 5வதுஇடம் கொடுக்க காரணம், அவருக்கு எதிராக நான் 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை. நானும், வக்கார் யூனிசும் அவருக்கு எதிராக 10 ஆண்டுகளாக பந்து வீசவில்லை. தெண்டுல்கர் தனது 16-வது வயதில் 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினார். அதன் பிறகு அவருக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு 1999-ம் ஆண்டில்தான் கிடைத்தது.
சார்ஜாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருக்கு பந்து வீசினேன். ஆனால் டெஸ்ட் போட்டி வித்தியாசமானது. கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு பவுலராக நான் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் அவரை மதிப்பிடுவது எனக்கு கடினமாக இருக்கிறது” என்றார்.