ரோஹிச் சர்மாவின் அதிரடியான அரை சதத்தால் மவுன்ட் மவுங்கனியில் நடந்து வரும் 5-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பைக் கவனித்தார். ரிஷப் பந்த்துக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தது. சவுதியைத் தவிர மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகவே பந்து வீசினர். சவுதி பந்து வீசாமல் இருந்தால் நியூஸிலாந்து அணி 50 ரன்களை மிச்சப்படுத்தி இருந்திருக்கும். கேப்டனாக இருக்கிறேன் என்பதாலேயே பந்துவீச வேண்டுமா? சவுதியின் மோசமான பந்துவீச்சுதான் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
இதனால் ராகுலுடன், சாம்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினார். வழக்கம் போல் சாம்ஸன் களத்தில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதிரடியான ஷாட்களை ஆடி ஆட்டமிழக்கும் சாம்ஸன் இந்த முறை குகிலன் பந்துவீச்சில் சான்ட்னருக்கு கேட்ச் அளித்துவிட்டு 2 ரன்னில் வெளியேறினார். சாம்ஸனுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தும் அவர் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னும் பேட்டிங்கில் பொறுப்பில்லாமல் ஷாட்களை ஆடுவதும், அவசரப்பட்டு ஷாட்களை ஆடி விக்கெட்டை இழந்து முதிர்ச்சியற்ற வீரர் என்பதைக் காட்டுகிறார்
8 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த ரோஹித் சர்மா, ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் வழக்கம் போல் நியூஸிலாந்து பந்து வீச்சைப் பதம் பார்த்தனர். பவுண்டரி சிக்ஸர்கள் என விளாச ஸ்கோர் வேகமெடுத்தது. பவர்ப்ளே ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. இருவரும் அரை சதத்தை நெருங்கினர்.
ராகுல் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது பெனட் பந்துவீச்சில் கவர் திசையில் நின்றிருந்த சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுல் கணக்கில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன்பின் சிறிதுநேரமே களத்தில இருந்த நிலையில் ரோஹித் சர்மாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் ரோஹித் வெளியேறினார். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதில் சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்
அடுத்து வந்த ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்தார். துபே 5 ரன்னில் குகிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே களமிறங்கி ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாட முயன்றும் பந்துகள் சரியாகச் சிக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் பலமுறை சில ஷாட்களை அவர் அடிக்க முயன்றும் அது தவறிப்போனது.
ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களிலும், மணிஷ் பாண்டே 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து தரப்பில் குகிலின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.