நாங்கள் போட்டி மனப்பான்மையுடனான விளையாட்டை விரும்புகிறோம் என்று ரிஷப் பந்த்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்று அங்கு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், இந்திய கேப்டன் கோலி, ரிஷப் பந்த ஆகியோர் களத்தில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் மோதல் சமூக வலைதளங்களில் விவாதமாகவும் மாறி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவரது இல்லத்தில் இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்பிரமணியம் இந்திய வீரர்களை மோரிசனுக்கு அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் ரிஷப் பந்த்தை அறிமுகப்படுத்தும்போது, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ரிஷப் பந்த்தை நோக்கி ”நீங்கள் தானே களத்தில் சத்தமிட்டது … உங்களை வரவேற்கிறேம். நாங்கள் போட்டி மனப்பான்மையுடனான விளையாட்டை விரும்புவோம்” என்றார். இதற்கு ரிஷப் பந்த் சிரிக்க அவரை முதுகில் தட்டிக் கொடுத்து வழி அனுப்பினார்.
முன்னதாக, இந்திய வீரர் ரிஷப் பந்த்தும் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.இதில் பெய்ன் ரிஷப் பந்த்தை நோக்கி பேபி சிட்டராக (குழந்தைகளைப் பராமரிப்பவர்) இருப்பீர்களாக என்று கிண்டலாகக் கேட்டிருந்தார்.
இதற்கு ரிஷப் பந்த் , ”ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னை தற்காலிகக் கேப்டன் என்றும், அவருக்குப் பேச மட்டும்தான் தெரியும்” என்றும் பதிலடி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பெய்னின் மனைவி பாம் பெய்ன் அவரது குழந்தைகளுடன் ரிஷப் பந்த் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு களத்தில் மட்டும் சண்டை என்பதை மறைமுகமாக கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
ஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா தொடரை வெல்லும். இந்தியாவால் தொடரை எளிதாக வெல்ல முடியாது என்று முன்னாள் வீரர்கள் கருத்து கூறினார்கள்.
ஆனால் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோரின் அபார பந்து வீச்சைப் பார்த்து ஆஸ்திரேலியா மிரண்டு போய் உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் சிட்னி டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டியளித்தார்.
அப்போது ‘‘நாங்கள் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற விரும்புகிறோம். ஆனால் தற்போது உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும் இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது அது சாத்தியமில்லை’’ என்றார்.